அலெக்சாண்டர்
அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண்டவர் அலெக்சாண்டர்.
கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் உள்ளன.
கி.மு., 359ல் அலெக்சாண்டருடைய தந்தை பிலிப், மாசிட்டோனியாவின் மன்னரானார். கிரீசின் வடபகுதியில் இருந்த சிறிய நாடுதான் மாசிட்டோனியா ஆகும். பிலிப் மிக சிறந்த போர் வீரர்களை உருவாக்கினார். ஏதென்சையும், ஸ்பார்டாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
கி.மு., 336ல் சதிகாரர்களின் சதியால் பிலிப் கொல்லப்பட்டார். தனது 20வது வயதில் அலெக்சாண்டர் அரசர் ஆனார். அலெக்ஸ் தனது தந்தையிடம் போர் முறையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார். சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி கற்றார்.
பாரசீகருடைய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற கி.மு., 334ல் பாரசீகம் மீது அவர் படையெடுத்தார். பாரசீகத்தின் படை பெரியது, தேவைப்பட்டால் பாரசீகர்களால் 10 லட்சம் படை வீரர்களை கூட திரட்ட முடியும். அலெக்சாண்டரின் படையோ மிக சிறியது. படை சிறியதாக இருந்தாலும், அலெக்சாண்டரின் படையோ நம்பிக்கையினை பெரிய அளவில் கொண்டு இருந்தது. படை வீரர்கள் திறமை மிக்கவர்கள். இந்த படையுடன் “கிரானிக்ஸ்’ நதிக்கரையில் பாரசீகத்தோடு மோதி அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். அடுத்து அவர் எகிப்தை வெற்றி கொண்டார். நைல் நதி கரையில் “அலெக்சாண்டரியா’ என்ற நகரத்தை அவர் ஏற்படுத்தினார். பாரசீகர்கள் மீண்டும் படை திரட்டி வந்து அலெக்சாண்டரை எதிர்த்தனர். அலெக்சாண்டரிடம் 7 ஆயிரம் குதிரை படை வீரர்களும், 40 ஆயிரம் காலாட் படையினரும் இருந்தனர். எதிரிகளிடம் 10 லட்சம் பேர் கொண்ட படையிருந்தது. ஆயினும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றார். நம்பிக்கையோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மிக அதிகமாக கொண்டிருந்தவர் அலெக்சாண்டர்.
தொடர்ந்து ஆசியாவின் ஆப்கானிஸ்தான், சாமர்கண்ட், தாஷ்கண்ட், பஞ்சாப் போன்ற பகுதிகளை வென்றார். வெற்றி தந்த மகிழ்வினாலோ என்னவோ, அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. பாரசீகத்தின் உடைகளை அணியவும், ஆடரம்பரமாக வாழவும் தொடங்கினார். தனது வீரர்கள் ஆசிய பெண்களை மணப்பதை ஊக்குவித்தார். கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயன்றார். இந்தியாவில் பஞ்சாப் மன்னரை எதிர்த்து நடந்த போர்தான் அலெக்சாண்டரின் கடைசி போர். 8 வருடம் தொடர்ந்து போரிட்டது… தாய் நாட்டை விட்டு 11 ஆயிரம் மைல் கடந்து வந்திருந்தது… ஆகியவற்றால் வீரர்கள் உற்சாகம் இழந்தனர். எனவே, தாய்நாடு செல்வதையே அனைவரும் விரும்பினர்.
திட மனது கொண்ட அலெக்சாண்டரால் கூட அவர்களது மனநிலையை மாற்ற முடியவில்லை. எந்த போரிலும் தோல்வி கண்டிராத வீரர்களில் பலர் களைப்பினால் வழியில் உயிர் துறந்தனர். அலெக்சாண்டரையும் நோய் பற்றியது. கி.மு., 323 ஜூன் 19ல் அலெக்சாண்டரின் உயிர் பிரிந்தது. உலகின் மாபெரும் வீரரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது.
Nandri: தமிழ் முகநூல்