கம்ப்யூட்டரால் கண் வலியா?
கம்ப்யூட்டரால் கண் வலியா? டிவென்டி-20 ரூல்சை ஃபாலோ பண்ணுங்க
கடந்த 11ம் தேதி உலக பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டது. முன்பெல்லாம் 40 வயதை
தாண்டியவர்கள்தான் மூக்கு கண்ணாடி அணிவார்கள். ஆனால், தற்போது 2ம் வகுப்பு படிக்கும்
மாணவன் கூட மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, உணவுப்பழக்கமே காரணம் என்கிறார் அமெரிக்கன் ஐ கேர் சென்டர் டாக்டர் டி.பி.பிரகாஷ்.
கண் மருத்துவ பரிசோதனையில் தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், கண் பார்வை குறைபாடுக்கான காரணங்கள் குறித்தும் இதோ அவரே விளக்கம் தருகிறார்...
இன்றைய கால கட்டத்தில் எல்லா துறையை சேர்ந்தவர்களும் கம்ப்யூட்டரில்தான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. பணி நிமித்தம் காரணமாக 8 மணி நேரம் தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், பெரும்பாலானவர்களுக்கு பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, அதிகளவில் கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் டிவென்டி-20 என்ற ரூல்சை ஃபாலோ செய்வது நல்லது.
அதாவது, 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தால் 20 செகன்ட் ரிலாக்ஸ் செய்யுங்கள். அந்த 20 செகன்ட்டில் கண்களை மூடி, கண்களுக்கு ஓய்வு தரலாம். அல்லது 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்த்துக் கொண்டிருங்கள். அப்படி செய்வதால் கண் வலி ஏற்படாது. பார்வை குறைபாடு ஏற்படுவது பெருமளவு தடுக்கப்படும்.
நிறைய பேர் கான்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். டாக்டர் ஆலோசனை இல்லாமல், பவர் இல்லாத லென்ஸ் தானே என்று நீங்களாக எந்த லென்சையும் அணியாதீர்கள். அதனால் உங்கள் பார்வையே பறிபோகும் அபாயமும் ஏற்படலாம். கருவிழியையே மாற்ற வேண்டிய ஆபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் புட் தருவதை தவிர்த்து, காய்கறி பழங்கள் அதிகளவில் தர வேண்டும். பச்சை, சிவப்பு நிற காய்கறி பழங்களை சாப்பிடுவதால் பார்வை திறன் அதிகரிக்கும். எந்த வயதினராக இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக, குழந்தைகளுக்கு அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும்.
நன்றி-தினகரன்