Pages - Menu

Thursday, August 8, 2013

வ.உ.சிதம்பரம் பிள்ளை



சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
2. வ.உ.சிதம்பரம் பிள்ளை.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்


வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றி நாமக்கல்லார்






சிதம்பரம் பிள்ளையென்று பெயரைச் சொன்னால் - அங்கே
சுதந்திர தீரம் நிற்கும் கண்முன்னால்
விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் - நாட்டின்
விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே!

திலக மகரிஷியின் கதைபாடும் - போது
சிதம்பரம் பிள்ளை பெயர் வந்து சுதிபோடும்
வலது புயமெனவே அவர்க்குதவி - மிக்க
வாழ்த்துக் குரிமை பெற்றான் பெரும் பதவி.

சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் - அதில்
துன்பம் பல சகித்த அணிமனத்தான்
விதேச மோகமெல்லாம் விட்டவனாம் - இங்கே
வீர சுதந்திரத்தை நட்டவனாம்.

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் கப்பலோட்டிய தமிழன் என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றி வைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். காங்கிரஸ் வரலாற்றில் மிதவாத அரசியல் வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உதயமான அஹிம்சை வழிப் போராட்ட காங்கிரஸ் என மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இதில் இரண்டாம் பகுதி காங்கிரசில் பால கங்காதர திலகரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வ.உ.சி. அவர்கள் போராடினார்.

தென்னாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி அவர்களோடு போரிட்டு தூக்கிலடப்பட்டு மாண்டுபோன பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரம்தான் இவர் பிறந்த ஊர். இவர் பிறந்தது 1872 செப்டம்பர் 5ஆம் நாள். கட்டபொம்மனின் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை அவர்களின் உறவினராக வந்தவர்தான் வ.உ.சி. இவரது தந்தை உலகநாதப் பிள்ளை, தாயார் பரமாயி அம்மை. இவருக்கு நான்கு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர்.

தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியும் வக்கீல் தொழிலுக்கான பிளீடர் கல்வியை திருச்சியிலும் பயின்று வக்கீலானார். ஒட்டப்பிடாரத்தில் இவர் வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார். 1895இல் தமது 23ஆம் வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். அவர் ஆறு ஆண்டு காலத்தில் இறந்து போகவே மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வ.உ.சிக்கு இளமை முதலே தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் கொண்டிருந்தார். 1906இல் இவர் மகாகவி பாரதியாரை சென்னை 'இந்தியா' அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இவரும் ஓர் சிறந்த பேச்சாளர்.

1905இல் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர் பிரிட்டிஷ்காரர்கள். நாடெங்கிலும் எதிர்ப்பலை எழுந்தது. விபின் சந்திர பால் சென்னை வந்து கடற்கரையில் ஓர் சொற்பொழிவாற்றினார். 1908இல் சென்னை ஜனசங்கம் எனும் அமைப்பு ஒன்று தோன்றியது. இதில் வ.உ.சி. நிர்வாகக் குழுவின் இருந்தார். வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி எனும் பெயரில் ஒரு கப்பல் கம்பெனி ஆரம்பித்தார். இதற்கு முதலீடு செய்வதற்குப் பலரையும் சென்று பங்குகள் சேர்த்து ஒரு கப்பலையும் வாங்கி பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு எதிராக சரக்கு ஏற்றுமதி இறக்குமதியைச் செய்தார். இதற்கு ஆங்கிலேயர்களின் பலத்த எதிர்ப்பு இருந்தது. போட்டி காரணமாக பிரிட்டிஷ் கம்பல் கம்பெனி பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்வதாகக்கூட அறிவித்தது.

1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அங்குதான் திலகர் தலைமையிலான தீவிரவாதக் கோஷ்டிக்கும், மிதவாதத் தலைவர்களுக்குமிடையே பூசல் எழுந்து மாநாடு நின்று போயிற்று. இதற்கு வ.உ.சி. மகாகவி பாரதி ஆகியோர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னையிலிருந்து ரயிலில் சென்றனர். அங்கிருந்து திருநெல்வேலி திரும்பிய வ.உ.சி. தேசாபிமானச் சங்கம் என்றதொரு அமைப்பைத் தோற்றுவித்தார். சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டார். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தினார். ஆங்கில நிர்வாகம் இவர் மீது ஆத்திரம் கொண்டது. தனது வீரமான மேடைப் பேச்சினால் மக்களை மிகவும் கவர்ந்து வந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா இவரது ஆதரவில் இவரோடு தங்கியிருந்து பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். எங்கும் சுதந்திர வேகத்தையும் 'வந்தேமாதர' கோஷத்தையும் இவர்கள் இருவரும் பரப்பி வந்தனர். அப்போது தூத்துக்குடியில் துணை மாஜிஸ்டிரேட்டாக இருந்த ஆஷ் எனும் ஆங்கிலேயன் வ.உ.சி மீது வன்மம் பாராட்டி இவருக்கு இடையூறு செய்து வந்தான். அதற்கு திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் துரையும் ஆதரவாக இருந்தான்.

1918இல் ஏப்ரல் 13. பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் பயங்கரமாக பொதுமக்களை ஆயிரக்கணக்கில் சுட்டுத் தள்ளினான் ஜெனரல் டயர் என்பவன். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பெரிய கூட்டம் நடைபெற்றது. வ.உ.சியும் சிவாவும் பேசினர். விபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாள் விழாவாக அது நடைபெற்றது. போலீஸ் அடக்குமுறையாலும், ஆஷ், கலெக்டர் ஆகியோரின் வெறித்தனத்தாலும் அன்று திருநெல்வேலியில் பயங்கர கலவரம் நடைபெற்றது. இதனை நெல்லைச் சதி வழக்கு என்ற பெயரில் விசாரித்தார்கள் இந்த வழக்கின் முடிவில் வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையையும் கொடுத்தார்கள். இதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதற்காகவும் வ.உ.சிக்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வ.உ.சிக்கு வயது முப்பத்தைந்துதான். இதனையடுத்து வ.உ.சி. மேல்முறையீடு செய்து அதில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ராஜ நிந்தனைக்காக ஆறு ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நான்காண்டு தீவாந்தரமும் கொடுத்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டனர். இதன் பின்னரும் இங்கிலாந்தில் இருந்த பிரீவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ததில் தீவாந்தர தண்டனைக்குப் பதிலாக கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இவர் கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் இருந்த போது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார். சிறையில் இவரை கல் உடைக்கவும், செக்கிழுக்கவும் வைத்து வேடிக்கை பார்த்தது ஆங்கில ஆளும் வர்க்கம். இவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பிணித்து செக்கிழுக்க வைத்தனர். இந்த செக்கு இரண்டு கருங்கற்களால் ஆனது. இந்த செக்கு பின்னர் 1972இல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கிடையே ஆஷ் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி கலெக்டராக ஆனான். அவன் தன் மனைவியுடன் கொடைக்கானலில் படிக்கும் தன் மக்களைப் பார்ப்பதற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் மாற்று ரயிலுக்காகத் தன் ரயில் பெட்டியில் காத்திருக்கும்போது, வாஞ்சிநாதன் எனும் செங்கோட்டை வாலிபன் உள்ளே நுழைந்து ஆஷைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, வெளியே வந்து தானும் சுட்டுக்கொண்டு இறந்து போனான். ஆளுவோரின் சந்தேகம் வ.உ.சி., பாரதி. வ.வெ.சு. ஐயர் ஆகியோர் மீதும் விழுந்தது. சிறையிலிருந்த வ.உ.சிக்கு இதனால் மேலும் சில கஷ்டங்கள் நேர்ந்தன. பாரதியை பிரிட்டிஷ் வேவுகாரர்கள் வேவு பார்த்துத் தொல்லை கொடுத்தனர்.

130 பவுண்டு எடையோடு சிறை சென்ற இவர் வெளிவரும்போது 110 பவுண்டு இருந்தார். இவர் சிறையில் இருந்த காலத்தில் இவரது சுதேசி கப்பல் கம்பெனி ஆங்கிலேயருக்கே விற்கப்பட்டு விட்டது. இவர் 24-12-1912இல் விடுதலை செய்யப்பட்டார். சுப்பிரமணிய சிவா 2-11-1912இல் சேலம் சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் இவர் சிறையில் இருந்த போது தொழுநோய் இவரைப் பற்றிக்கொண்டது. வியாதியஸ்தராகத்தான் இவர் வெளியே வந்தார். இது சிறை தந்த சீதனம் என்று மனம் நொந்து கூறினார் சிவா. ஆயிரக்கணக்கான மக்கள் வழியனுப்ப சிறை சென்ற வ.உ.சி. விடுதலையாகி வெளியே வரும்போது எவரும் இல்லை. தொழுநோய் பிடித்த சுப்பிரமணிய சிவா மட்டும் காத்திருந்தார். இதனை பி.ஆர்.பந்துலு எனும் சினிமா தயாரிப்பாளர் தான் தயாரித்த "கப்பலோட்டிய தமிழன்" எனும் படத்தில் காட்டியிருந்தார். பார்த்தோர் அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

சிறைவாசம் முடிந்து வ.உ.சி. தூத்துக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ செல்லவில்லை. மாறாக சென்னை சென்றார். இவர் சிறைப்பட்டதால் இவரது வக்கீல் சன்னது பறிக்கப்பட்டது. சென்னையில் என்ன தொழில் செய்வது? மண்ணெண்ணை விற்றார். சரிப்பட்டு வரவில்லை. மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் எனும் தேசபக்தர் இவருக்கு உதவினார். சென்னையில் சில பிரபல தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு வி.க., சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு ஆகியோர் அவர்கள். சென்னை பின்னி மில், சென்னை டிராம்வே தொழிலாளர்கள், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் ஆகியவற்றில் தீவிர பங்கெடுத்துக் கொண்டார். இந்திய தொழிலாளர் இயக்கத்தில் அன்னிய நாட்டில் பிறந்த அன்னிபெசண்ட் ஈடுபடுவதை இவர் எதிர்த்து குரல் கொடுத்தார்.

சிலகாலம் இவர் கோயம்புத்தூரிலும் சென்று தொழிற்சங்க பணியாற்றினார். எனினும் முன்பு போல காங்கிரஸ் இயக்கத்தில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லை. திலகர் காலமாகிவிட்ட பிறகு மகாத்மா காந்தி 1919இல் இந்திய சுதந்திரப் போரை முன்னின்று நடத்தத் தொடங்கினாரல்லவா? அப்போது அவர் ஒரு சில நேரங்களில் தனது கருத்துக்களை வெளியிட்டு மகாத்மாவின் சாத்வீக இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். பிறகு அவரது நம்பிக்கை தளர்ந்தது போலும். 1920 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இவர் "திலகர் ஒத்துழையாமை மூலம் சுயாட்சி பெற விரும்பவில்லை யென்றும், சட்டப்படியான ஆயுதத்தைப் பயன்படுத்தியே சுதந்திரம் பெறவேண்டும்" என்றும் பேசியிருப்பதிலிருந்து இவருக்குச் சிறுகச் சிறுக மகாத்மாவின் சாத்வீக இயக்கத்தில் நம்பிக்கி இழப்பு நேர்ந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு காங்கிரசிலிருந்து இவர் விலகினார்.

கொள்கை காரணமாக காங்கிரசிலிருந்து விலகிய வ.உ.சி. பிறகு 1827இல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மகாநாட்டில் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். அந்த மகாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். எனினும் பிறகு இவர் காங்கிரசில் தொடர்ந்து செயல்படமுடியவில்லை. 1916இல் சென்னை ராஜதானியில் டாக்டர் நாயர் தலைமையில் தோன்றி வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார் இயக்கத்தின்பால் இவருக்கு ஈடுபாடு வந்தது. 1927இல் இவர் கோயம்புத்தூரில் நடந்த மாநாட்டில் தலைமை ஏற்றார். எனினும் இந்த இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியாக மாறியபோதும் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்த போதும் வ.உ.சி. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பல துறைகளிலும் பிராமணரல்லாதார் பிந்தங்கி இருப்பதற்காக அவர் வருந்தினார், அவர்கள் முன்னேற பாடுபடவும் விரும்பினார் என்றாலும் அதற்காக பிராமணர் - பிராமணரல்லாதார் எனும் சாதி வேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கம் தோன்றுவதையோ, வளர்வதையோ அவர் விரும்பவில்லை.

பெறுதர்கரிய ஓர் சிறந்த தேசபக்தரான வ.உ.சிதம்பரம் பிள்ளை1936 நவம்பர் 18ஆம் தேதி இரவு 11-30 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார். அவர் இறக்கும் தருவாயில் மகாகவியின் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" எனும் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர் பிரிந்தது. வாழ்க கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்!


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பற்றி நாமக்கல்லார் பாடிய பாடல்.

சிதம்பரம் பிள்ளை என்று பெயர் சொன்னால் - அங்கே
சுதந்திர தீரம் நிற்கும் கண் முன்னால்
விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் - நாட்டின்
விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே!

திலக மகரிஷியின் கதை பாடும் - போது
சிதம்பரம் பிள்ளை வந்து சுதி போடும்
வலது புயமெனவே அவர்க்குதவி - மிக்க
வாழ்த்துக்கு உரிமை பெற்றான் பெரும் பதவி.

சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் - அதில்
துன்பம் பல சகித்த அணி மனத்தான்
விதேச மோகமெல்லாம் விட்டவனாம் - இங்கே
வீர சுதந்திரத்தை நட்டவனாம்.

நன்றி: "தமிழன் இதயம்" நாமக்கல்லார்.

No comments:

Post a Comment